கமல்ஹாசனுடன் இஸ்லாமியர் சந்தித்து சிஏஏ குறித்து ஆலோசனை
இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த பலர் கமல்ஹாசனை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கடந்த 1 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அதன் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசி இருந்தனர். இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த காஜா முயீனுத்தீன் பாகவி, "சிஏஏ சட்டத்தின் பாதிப்பு குறித்து ரஜினியிடம் தெளிவாக விளக்கினோம். ரஜினி புரிந்துக் கொண்டார். மக்களின் அச்சத்தைப் போக்க தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் அனைத்து வகையிலும் மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்” என்றார். அதற்கு முன்பாக, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபு பக்கரும் ரஜினியை சந்தித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சிஏஏ சட்டத்தில் உள்ள பாதிப்புக்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடியதாக தெரிகிறது. இந்தச் சந்திப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், “தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினர். இவர்களுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் உள்ள மலபார் முஸ்லிம் அசோசியேசனைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டார். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தமைக்கு தங்களின் நன்றியினை கமல்ஹாசனிடம் தெரிவித்துக் கொண்டனர்.
அவர்களிடம் அனைத்து மக்களும் பங்கெடுக்கும் போராட்டமாக இது மாறுவதற்கு உங்களது ஆதரவு வேண்டும் என கமல்ஹாசனைக் கேட்டுக் கொண்டனர். மேலும் இந்திய இறையாண்மைக்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று கமல் வாக்குறுதி அளித்தார்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.