கள்ளகுறிச்சி கல்வராயன் மலை பகுதியில் போதிய வகுப்பறை வசதி இல்லாத்தால் மாடிப்படியில் வைத்து வகுப்புகள் எடுக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளதால், புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கொட்டபுத்தூர் கிராமத்தில் அரசு உண்டிஉறைவிட மேல் நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 400 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு படிப்பதற்கு போதிய பள்ளி வகுப்பறை இல்லாததால் 6 ஆம் வகுப்பில் பயிலும் சுமார் 57 மாணவ-மாணவிகளுக்கு மாடிக்கு செல்லும் படியில் அமரவைத்து வகுப்புகள் நடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில் கழிப்பறை வசதி, மாணவிகள் தங்கும் விடுதியில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கு பெண் காவலர், உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் குறித்து பல முறை அரசுக்கும், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கும் மனுக்கள் கொடுக்கப்பட்டும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி அந்த பள்ளிக்கு வகுப்பறைகள் கட்டித் தருமாறும், கழிவறைகள் மற்றும் தண்ணீர் வசதி ஆகியவற்றை உடனடியாக ஏற்படுத்தித் தருமாறும் பொது மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட போது, சம்பவம் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.