கள்ளக்குறிச்சி: “என் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள்” - எனக் கூறிவிட்டு மாயமான இளம்தாய்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் பகுதியில் மாதா கோவில் தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில், குதிரைச்சந்தல் பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது பத்மாவை நோக்கி வந்த இளம் பெண் ஒருவர், “நான் இயற்கை உபாதை கழிக்க செல்கிறேன், சிறிது நேரம் என் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள்” எனக்கூறி பச்சிளம் குழந்தையை கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரம் வரை பச்சிளம் குழந்தையை கையில் சுமந்தவாரே காத்திருந்திருக்கிறார் பத்மா. பல மணி நேரம் கடந்தும் குழந்தையை வாங்க இளம் தாய் வரவில்லை என்பதால் பதற்றம் அடைந்த பத்மா, அருகில் உள்ள சங்கராபுரம் காவல்நிலையத்திற்கு குழந்தையுடன் சென்றுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்த போலீசார் குழந்தைகள் நலக் குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த குழந்தைகள் நலக்குழுவினர் குழந்தையை மீட்டு காப்பகத்திற்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பச்சிளம் குழந்தையை கொடுத்துவிட்டு மாயமான இளம் தாயை தேடி வருகின்றனர்.
பிறந்து இரண்டு நாளேயான பச்சிளம் குழந்தையை தாய் தனியாக தவிக்க விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.