`மீண்டும் பணி வழங்காவிட்டால் ஆதார், ரேஷன் அட்டைகளை ஒப்படைப்போம்’- சுங்கச்சாவடி ஊழியர்கள்

`மீண்டும் பணி வழங்காவிட்டால் ஆதார், ரேஷன் அட்டைகளை ஒப்படைப்போம்’- சுங்கச்சாவடி ஊழியர்கள்
`மீண்டும் பணி வழங்காவிட்டால் ஆதார், ரேஷன் அட்டைகளை ஒப்படைப்போம்’- சுங்கச்சாவடி ஊழியர்கள்

உளுந்தூர்பேட்டையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று இரவிலும் போராட்டம் நடத்தியுள்ளனர் சுங்கச்சாவடி ஊழியர்கள். இதனால் நள்ளிரவில் சுங்க வசூல் மையங்களை பூட்டை உடைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் வருவாய்த்துறையினர். சுங்கச்சாவடியில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, ஊழியர்கள் வசூல் மையங்களை பூட்டிவிட்டு சுங்கச்சாவடி அலுவலகம் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து மூன்று நாட்களாக நீடித்து வந்த இந்தப் போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணமின்றி சுங்கன்சாவடியை கடந்து சென்று வருகின்றன. இதனால் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் பல கட்டங்களாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படாததால், ஊழியர்கள் தொடர்ந்து போரட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் மத்திய தொழிலாளர் நல துணை ஆணையர் ரமேஷ் குமார்யிடம் போராட்ட குழு சார்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தொடர்ந்து மூன்றாம் நாள் இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நள்ளிரவில் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் தலைமையில் போராட்டம் நடந்த இடத்துக்கு சென்ற வருவாய் துறையினர், போராட்டம் நடத்திய பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள், `எங்களுக்கு மீண்டும் பணி வழங்கவில்லை என்றால் எங்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களை உங்களிடம் ஒப்படைத்து விடுவோம்’ என்று அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு பூட்டப்பட்டு இருந்த வசூல் மையங்களின் பூட்டை உடைத்து அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இதனால் சுங்கச்சாவடி கடந்து செல்லும் வாகனங்களிடமிருந்து fastrack முறையில் பணம் வசூல் செய்யும் பணி தொடங்கியது. சுங்கச்சாவடியில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு வசூல் மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட 28 பணியாளர்கள் அலுவலகம் எதிரே அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com