பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய கள்ளக்குறிச்சி எஸ்.பி.
கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பள்ளி மாணவர்களுக்கு அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பாடம் நடத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சராபாளையம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் நேரில் பார்வையிட்டார்.
இந்நிலையில், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிடும்போது, எதிர்பாராத விதமாக அங்குள்ள வகுப்பறைக்குள் சென்று 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தை எடுத்தார். அதேபோல, சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவிகளுக்கு சமுக அறிவியல் பாடத்தையும் அவர் நடத்தினார். கள்ளக்குறிச்சி எஸ்.பி. திடீரென வகுப்பறைக்குள் நுழைந்து பாடம் எடுத்ததால் மாணவ - மாணவிகள் உற்சாகமடைந்தனர்.