கள்ளக்குறிச்சி | அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து - காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
செய்தியாளர்: கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்துள்ள ராயப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சாமிநாதன் என்பவர் மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் பணிக்குச் சென்று விட்டு நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கீரனூர் மேம்பாலம் அருகே சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது.
இதில், காவல் உதவியாளர் சாமிநாதன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து சாமிநாதனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.