கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்... “வழக்கை சிபிஐக்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை”- தமிழக அரசு
சிபிஐக்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர் வாதிடுகையில், “கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி டி.எஸ்.பி., தலைமையில், 50 பேர் அடங்கிய 16 தனிப்படைகள் அமைத்து விசாரிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 24 பேரில் 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 244 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், “புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை. என்ன விசாரணை நடந்துள்ளது எனத் தெரியாமல் எப்படி விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கேட்க முடியும்” என அரசு தலைமை வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
அரசியல்வாதிகள், போலீசார் உடந்தையா?
தொடர்ந்து, “விசாரணை தவறாக இருந்தால் மறு விசாரணை கோரலாம் அல்லது வேறு புலன் விசாரணை அமைப்பு விசாரணைக்கு மாற்ற கேட்கலாம். உள்ளூர் போலீசார், ஆளுங்கட்சி அரசியல்வாதி தொடர்பிருந்தால் விசாரணையை மாற்றலாம். இந்த வழக்கில், உள்ளூர் அரசியல்வாதி, போலீசார் உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என்பதற்கு எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யவில்லை” என்றார்.
மேலும், மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டதைச் சுட்டிக்காட்டிய தலைமை வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தினரோ, தொண்டு நிறுவனங்களோ, நடுநிலையானவர்களோ வழக்கு தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
கட்சியினரே வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளில், இரு வழக்குகள் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர். பா.ம.க, தேமுதிக, பா.ஜ. கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாக பட்டியலிட்டார்.
அரசியல்வாதிகள் என்பதற்காக வழக்கு தாக்கல் செய்ய அவர்களுக்கு உரிமையில்லையோ என்றோ, நம்பிக்கையில்லை என்றோ கூற முடியாது எனக் கூறிய அவர், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை கூறி, முன்கூட்டியே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், இதுசம்பந்தமாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அதுபோல எந்தப் புகாரும் இல்லை எனவும், சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை அவர் எழுப்பியபோது, சபாநாயகர் அதை நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அதிகரித்துள்ளது தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ. எழுப்பிய பின், அதை போலீசார் மறுத்தார்களா என விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி, தலைமை வழக்கறிஞருக்கு, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தமிழக அரசுத்தரப்பு வாதம் முடிவடையாததால் வழக்கு விசாரணையை செப்டம்பர் 4ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.