govt school
govt schoolpt desk

கள்ளக்குறிச்சி: வகுப்பறைகள் பற்றாக்குறை.. மாணவர்கள் மரத்தடியில் வெயிலில் அமர்ந்து படிக்கும் அவலம்!

கள்ளக்குறிச்சி அருகே பல ஆண்டுகளாக மரத்தடியே வகுப்பறையாகக் கொண்டு பயின்று வரும் மாணவர்கள் அவல நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்பாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த 2017 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஆண்டு தோறும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறைகள் வேண்டி 2017 ஆம் ஆண்டு பள்ளி நிர்வாகம் மாவட்ட கல்வி துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

school students
school studentspt desk

ஆனால் பல்வேறு காரணங்களால் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவில்லை. இதனால், பல ஆண்டுகளாக மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்தே பயின்று வருகின்றனர். 30 வகுப்பறைகள் தேவைப்படும் இடத்தில் 15 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 500 மாணவர்களின் வகுப்பறை மரத்தடியில் தான் நடைபெறுகிறது. பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இயற்பியல் மற்றும் வேதியல் ஆய்வகம் இல்லாதது மற்றொரு வேதனை. ஒரு ஆய்வு கூடத்திலே இரண்டு பாடங்களுக்கும் மாற்றி மாற்றி செய்முறை தேர்வு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

மரங்களின் அடியில், பாதி வெயிலிலும் பாதி நிழலிலும் அமர்ந்து மாணவர்கள் பாடம் பயின்று வருவது வேதனையாக உள்ளது. மழை காலங்களில் படிக்கட்டுகள் மற்றும் வராண்டாவில் அமர்ந்து இருப்பது மற்றொரு அவலம். இதனால் மாணவர்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் பள்ளயில் இரண்டு கழிவறை மட்டுமே உள்ளது. ஒரு சில வகுப்பறையில் மின்விசிறிகள் இல்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

school students
school studentspt desk

திறந்த வெளியில் அமர்ந்து பயில்வதால் மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் படிப்பு பாதிக்க படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூடுதல் வகுப்பறைகள் விரைந்து கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, நிதி ஒதுக்கீடு பரிசீலனையில் உள்ளதாகவும், நிதி ஒதுக்கிய பிறகு உடனடியாக கூடுதல் கட்டடம் கட்டப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com