”தவறு நடந்துள்ளது; அதனை நியாயப்படுத்தவில்லை” - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின் அமைச்சர்கள் பேட்டி

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - அமைச்சர்கள் பேட்டி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - அமைச்சர்கள் பேட்டிPT

29 ஆக அதிகரித்த உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்தனை உயிர்கள் பறிபோக காரணமான பாக்கெட் சாராயத்தில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கள்ளச்சாராய விவகாரம்
கள்ளச்சாராய விவகாரம்pt web

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பலருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன அவர்களது குடும்பத்தினர், பாதிக்கப்பட்டவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அடுத்தடுத்து 70க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மற்றும் சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தங்களது கணவர், சகோதரர்கள், மகன்களுக்கு என்ன ஆனதோ எனத் தெரியாமல் மருத்துவமனை வாசலில் அவர்களது குடும்பத்தினர் பதறிக்கொண்டிருக்க, சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவராய் உயிரிழந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

”தவறை நியாயப்படுத்தவில்லை” - அமைச்சர்கள்

விஷச்சாராயம் குடித்ததாலேயே அவர்கள் மரணமடைந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாராயம் விற்ற கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது சகோதரர் தாமோதரனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை பரிசோதித்ததில், மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்தது.

Kallakurichi
Kallakurichi

இதனிடையே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ. வேலு ஆகியோர், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தவறு நடந்துள்ளது; அதனை நியாயப்படுத்தவில்லை. தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க போதுமான மருத்துவக்குழு இருப்பதாகவும், 32 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளதென்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

தற்போது வரை இந்த விவகாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. விஷச்சாராயம் அருந்தியவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com