பாலியல் தொல்லை புகார்: கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் கைது

பாலியல் தொல்லை புகாரில் கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மனை ஹைதராபாத்தில் வைத்து சென்னை காவல்துறை கைதுசெய்தது

முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில் கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள கலாஷேத்ரா கல்லூரியில் மூத்த ஆசிரியர் ஒருவரால் தொடர்ந்து பாலியல் சீண்டல் நடைப்பெறுவதாக கடந்த டிசம்பர் மாதம் பிரபல நடன இயக்குனரும் கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் இயக்குனருமான லீசா சாம்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு பின்பு அதை நீக்கினார்.

இது குறித்து கலாஷேத்ரா அறக்கட்டளையால் அமைக்கப்பட்ட விசாரணை குழு கடந்த மார்ச் 19ஆம் தேதி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கலாஷேத்ரா அறக்கட்டளைகளில் பாலியல் சீண்டல்கள் எதுவும் நடைப்பெறவில்லை என கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு எதிராக கலாஷேத்ராவில் கல்வி கற்கும் மாணவிகள் தற்போது போர் கொடி ஏந்தியுள்ளனர். அவர்களின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த அப்பள்ளியில் 2019 ஆம் ஆண்டு நடனம் பயின்ற முன்னாள் மாணவி சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றினை அளித்தார்.

இந்த புகாரில் தான் நடனம் பயின்ற பொழுது நடன பள்ளி உதவி ஆசிரியர் ஹரிஷ் பத்மன், தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்களும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் புகார் அளித்த கேரளாவை சேர்ந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொள்வதற்காக சென்னை அடையாறு உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான அனைத்து மகளிர் காவல் நிலைய தனிப்படை போலீசார் கேரளா மாநிலத்திற்கு நேற்று சென்றனர். இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஹரி பத்மன் தலைமறைவாக உள்ளதாகவும் தகவல் கிடைத்தது. இந்நிலையில் இன்று கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மனை ஹைதராபாத்தில் வைத்து சென்னை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. சென்னை அழைத்துவரபட்ட பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com