அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு கலாம் சலாம் எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. காலம் கடந்தும் பேசப்படும் கலாமின் பெருமைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள 'கலாம் சலாம்' பாடலை 'சித் ஸ்ரீராம்' பாடியிருக்கிறார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுகு, இந்தி போன்ற மொழிகளிலும் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, தேசத்தின் உன்னத தலைவர்களுள் ஒருவராக உயர்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். புகழ்பெற்ற அறிவியல் அறிஞராகவும், ஒட்டுமொத்த தேசத்தின் அன்புக்குரிய குடியரசுத் தலைவராகவும் இருந்த கலாம், இளம் தலைமுறைக்கு உத்வேகமூட்டும் ஊக்க சக்தியாகவே இறுதிவரை இருந்தார். தனது வாழ்வே, தான் விட்டுச் செல்லும் செய்தி என்றே நம்பினார். அவரது வாழ்வும், எழுத்துகளும், இளைஞர்களிடம் அவர் ஆற்றிய உரைகளும் லட்சியப் பாதையில் பயணித்த முன்னோடி நமக்கு விட்டுச் சென்ற சொத்துக்கள் ஆகும். இந்நிலையில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு கலாம் சலாம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.