`அதிமுக-வின் ராசியே இப்படித்தான்...’- ஜாதகம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

`அதிமுக-வின் ராசியே இப்படித்தான்...’- ஜாதகம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
`அதிமுக-வின் ராசியே இப்படித்தான்...’- ஜாதகம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

நவம்பர் மாதத்தில் அதிமுகவில் தெளிவு ஏற்படும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் அதிமுகவின் 51வது தொடக்கவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட் புத்தகம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் ம.பொ.சி, ராஜாஜி, குமரிஆனந்தன், சிவாஜிகணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்திரன் என பலர் கட்சி ஆரம்பித்தும் காணவில்லை. விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக தேயந்து விட்டது. ஆனால் என்றைக்கும் நம்பர் 1 கட்சியாக நிலைத்து நிற்கும் கட்சி அதிமுக தான். அதிமுக இன்றைக்கு எதிர்கட்சியாக இருக்கலாம். ஆனால் மக்கள் உள்ளங்களில் ஆளும் கட்சி.

அதிமுகவிற்கும் 3 எழுத்துக்கும் ஒரு ராசி உண்டு. அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா (ஜெயலலிதா) ஆகியோருக்கு 3 எழுத்து இப்போது இபிஎஸ்க்கும் (எடப்பாடிபழனிச்சாமி) 3 எழுத்து. இன்னொருவருக்கும் 3 எழுத்து தான் ஓ.பி.எஸ். ஆனால் அவருக்கு முதல் பூஜ்யம் என்பதால் அவர் கணக்கில் வரமாட்டார். அதிமுகவில் இன்றைக்குள்ள நிலை போன்று 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி வரும். ஆனால் எழுச்சியுடன் அதிமுக மீண்டும் வெற்றி பெறும். அதன்படி வரும் நவம்பர் மாதத்தில் அதிமுகவில் தெளிவு ஏற்பட்டு, 3வது அத்தியதமாக எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச்செயலாளராக வருவார். கட்சி கொடியும், சின்னமும் எங்களிடம்தான் உள்ளது.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சி விடியா ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சி என்றைக்கு வீட்டிற்கு போகிறதோ, அன்றைக்கு தான் எங்களுக்கு விடியும் என்று மக்களால் பேசப்படும் ஆட்சியாக உள்ளது. அதிமுக ஆட்சி மாற்றத்திற்கு காரணம் அரசு ஊழியர்கள் தான். ஆனால் இன்றைக்கு தேர்தல் வரட்டும் இனி திமுக பக்கம் திரும்ப மாட்டோம் என்று அதிமுகவை விட வேகமாக உள்ளனர். நிழலின் அருமை வெயிலில் போனதால் தான் தெரியன், உதயசூரியன் சுட்டெரிக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என இந்த செய்திகள் தான் வருகிறது. வேறு நல்ல செய்தி எதுவும் வரவில்லை. இதனாலேயே குழந்தைகள், பெண்களை டிவி பார்க்க விடக்கூடாதுபோல.

கோவையில் 1995ல் நடைபெற்ற குண்டு வெடிப்பு போன்று ஆரம்பித்துவிட்டார்கள். நல்லவேளையாக அகப்பட்டுகொண்டார்கள். இல்லை என்றால் நாடே சின்னாபின்னமாகி இருக்கும். அவ்வளவு சட்ட ஒழுங்கு மோசம். இதுவரை மின்சாரம் தொட்டால்தான் ஷாக் அடித்தது. ஆனால் இனி மின்கட்டணம் செலுத்த போகும் போதும் ஷாக் அடிக்கும். மக்கள் தைரியமாக நெஞ்சை திடப்படுத்தி கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் ஒரு நல்லதிட்டம் கூட வரவில்லை, நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். இலங்கையை போன்று மக்கள் எழுச்சி எழுந்து, `நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வைக்க வேண்டும்’ என்று சொல்லும் நிலை வரும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு 40க்கு 40 அளித்தால் திமுக ஆட்சி வீட்டுக்கு போய்விடும் மக்களுக்கு விடியல் வரும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com