“கூட்டணி குறித்து டெல்லி பாஜக தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்” - அமைச்சர் கடம்பூர் ராஜு
கூட்டணி குறித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலின் போதும் எந்த முறையில் தேர்தல் நடந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே தேர்தல் முறை மாற்றப்பட்டது குறித்து பேசுவது பொருத்தமாக இருக்காது. பாஜகவுக்கு தமிழகத்தில் தலைவர் இல்லை. கூட்டணி பற்றி டெல்லியில் உள்ள பாஜக தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கு முதல் காரணம் திமுகதான். 7 பேர் விடுதலையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது. தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். எங்களுக்கு இரட்டை வேடம் போட தெரியாது. திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை வரும். இது அதிமுக எச்சரிக்கை என்று கருதவேண்டாம். மக்களே அவர்களை உள்ளே விடமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.