மதுக்கடை திறப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்: நீதிமன்றம் கருத்து

மதுக்கடை திறப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்: நீதிமன்றம் கருத்து
மதுக்கடை திறப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்: நீதிமன்றம் கருத்து

யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடை திறப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.

நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டது. இதனால் வருவாய் ஈட்டும் டாஸ்மாக் கடைகளை மீண்டும் வேறு இடங்களில் திறக்க தமிழக அரசு முடிவுசெய்தது.

டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருமுல்லைவாயில் பகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய 21 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ”மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்பதை நடைமுறையிலும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில், பள்ளி அருகே மதுக்கடை திறப்பு தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கப்பட வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை அமைப்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள் என்று கூறியதோடு டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் எனப் போராடுவது பெருங்குற்றமா?” என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களின் மீதான எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ததுடன், மூடப்பட்ட மதுக்கடைகள், மாற்றி அமைக்கப்பட்ட மதுக்கடைகள் எத்தனை என்பதைக் குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com