”நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தாமாக முன்வந்து பதவி விலகவேண்டும்” - திருமாவளவன் அறிக்கை
திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜி .ஆர், சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், வழக்கமாக ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்று மதுரை மாவட்ட காவல்துறை தெரிவித்தது. தீபம் ஏற்ற முயன்ற இந்து முன்னணி மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. டிசம்பர் 3 ஆம் தேதியை தொடர்ந்து மறுநாள் மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட போதும் அதனை நிறைவேற்ற முடியாது எனவும் மேல்முறையீடு சென்றுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தினங்கள் திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் சற்றே பதற்றமாக காணப்பட்டது. நீதிபதியின் உத்தரவு தமிழகத்தில் மதக்கலவரத்தைத்தூண்டி அமைதியை சீர்குலைக்கும் உத்தரவாக இருப்பதாக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற மறுப்பதாக தமிழ்நாடு அரசு மீது பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனங்கள் முன்வைத்தன.
சர்ச்சைக்குரிய உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி .ஆர், சுவாமிநாதனை பதவி நீக்க்கம் செய்யக்கோரி தீர்மானம் கொண்டுவர, இந்தியா கூட்டணி சார்பில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 120 எம்பிக்கள் ஆதரவுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று மனு அளித்தனர்.
”ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாக..”
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார் . அதில், "ஒருதலைச் சார்போடும், அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகவும், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாகத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டுமென நாடாளுமன்ற மக்களவைத் தலைவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையொப்பமிட்டு மனு ஒன்றை நேற்று அளித்துள்ளோம்.
நாடாளுமன்ற நடைமுறைப்படி மக்களவைத் தலைவர் அவர்கள், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஒரு சட்ட வல்லுநர் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவை உடனே அமைக்க வேண்டும். எனவே, மக்களவைத் தலைவர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார் .
”மதவெறி அரசியலைத் தூபமிட்டு வளர்க்கப் பார்க்கிறார்”
மேலும் நீதிபதி ஜி .ஆர், சுவாமிநாதன் 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கின் வரம்புகளை மீறி, திருப்பரங்குன்ற விஷயத்தில் தொடர்பில்லாத தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் இந்திய ஒன்றிய அரசின் உள்துறைச் செயலாளர் ஆகியோரை இந்த வழக்கில், விசாரணைக்கு அழைத்துள்ளார். இது சட்டத்தை மீறுவதோடு மட்டுமின்றி, மாநில-ஒன்றிய அரசுகளை அவமதிப்பதாகவும், திருப்பரங்குன்றம் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி மதவெறி அரசியலைத் தூபமிட்டு வளர்க்கப் பார்க்கிறார்.
அவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்துவார். தற்போதைய சூழலில் அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் 'இம்பீச்மெண்ட் நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ள நிலையில், தன்மீதான விசாரணை தடையின்றி நடப்பதற்கு ஏதுவாக, நீதிபதி ஜி .ஆர், சுவாமிநாதன் தானாக முன்வந்து பதவி வில வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்குமார் . ர

