"முழு ஆடியோவை வெளியிடுவதில் அண்ணாமலைக்கு என்ன சிக்கல்?" - பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்!

வெறும் 29-30 நொடி ஆடியோ க்ளிப் மட்டுமே வெளியிட்டிருக்கிறார். முழு ஆடியோவை வெளியிடுங்கள் என்று கேட்கும்போது அது பத்திரிகையாளர்களின் வேலை என்கிறார்.
MKStalin |PTR | PtrAudio
MKStalin |PTR | PtrAudioPT file picture

அமைச்சர் உதயநிதி மற்றும் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் இருவரும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என கூறி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஆடியோ விவகாரத்தில், யாருக்கும் விளம்பரம் தேடிக் கொடுக்க விரும்பவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தெரிவித்தார். இதுகுறித்து பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ”ஆடியோ - வீடியோ அரசியலானது உண்மையிலேயே மட்டமான அரசியல் என்பதுதான் என்னுடைய கருத்து. காரணம், எந்தவொரு தொலைபேசி உரையாடலாக இருந்தாலும் பதிவு செய்யப்படுவது மிகவும் தவறு. இன்னும் சொல்லப்போனால் அவை நீதிமன்றத்தில் சாட்சியமாகக்கூட ஏற்றுக்கொள்வதில்லை.

Annamalai
Annamalaipt desk

ஏனென்றால் இரண்டு தரப்பில் ஒருவருக்கு தெரிந்தோ அல்லது அவரது சம்மதத்தோடோ பதிவு செய்வது என்பது வேறு. தெரியாமல் பதிவுசெய்யும்போது அது குற்றமாகிறது. அதுபோக பதிவு செய்த முழு தொகுப்பையும் வெளியிட வேண்டும். ஆனால் அண்ணாமலை அவ்வாறு வெளியிடவில்லை. வெறும் 29-30 நொடி ஆடியோ க்ளிப் மட்டுமே வெளியிட்டிருக்கிறார். முழு ஆடியோவை வெளியிடுங்கள் என்று கேட்கும்போது அது பத்திரிகையாளர்களின் வேலை என்கிறார்.

நீதி பரிபாலன கோட்பாடே நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகள் என்பதுதான். ஆக குற்றச்சாட்டை சுமத்துகிற அண்ணாமலைதான் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை தரவேண்டுமே தவிர, ஆதாரங்களை தேடி அலையவேண்டிய பொறுப்பு என்பது மற்றவர்களுக்கு கிடையாது. இன்னும் சொல்லப்போனால் முழு ஆடியோவை வெளியிடுவதில் அவருக்கு என்ன சிக்கல் இருக்கிறது? தியாகராஜன் யாருடனாவது பேசியிருந்தால் அது எப்படி ஒட்டு கேட்கப்பட்டது அல்லது எப்படி பதிவு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு இப்போதுவரை பதில் இல்லை.

மாநில அரசு உளவுத்துறை ரீதியாக பதிவு செய்திருக்க முடியாது. அப்படியென்றால் மத்திய அரசு பதிவு செய்ததா? மத்திய அரசின் உளவுத்துறை பதிவு அண்ணாமலைக்கு எப்படி கிடைத்தது? அதிலிருந்து எதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியை மட்டும் வெளியிட வேண்டும்? முழுமையான பகுதியை வெளியிடலாமே போன்ற பல கேள்விகளுக்கு விடை இல்லை. நீரா ராடியா - கனிமொழி டேப், அமைச்சர் பூங்கோதை டேப் போன்றவையெல்லாம் லீக் செய்யப்பட்டன. அப்போதெல்லாம் முழு பதிவும் வெளியானது. இதுதவிர பாஜக உள்கட்சி விவகாரங்களில் ஆடியோக்கள் வெளியிடப்பட்ட போதுகூட முழுப்பதிவும்தான் வெளியானது.

ஆனால் அண்ணாமலை வெளியிட்ட பதிவு என்பது குறிப்பிட்ட எடிட்டிங். வெட்டி ஒட்டிய பகுதிகள் என்னும்போது யார் வேண்டுமானாலும், எத்தகைய கருத்தை வேண்டுமானாலும் உருவாக்கலாம். அதுவும் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் டீப் ஃபேக் போன்ற மென்பொருள்கள் உலவுகின்ற காலகட்டத்தில் இதுபோன்ற ஆடியோக்கள் அவதூறை கிளப்பும்விதமாகத்தான் இருக்கிறது. ஆக அவதூறு வழக்கு என்பது போடப்பட வேண்டும். ஆனால் அதை பழனிவேல் தியாகராஜன் தான் போடமுடியும்.

PTR
PTRpt desk

கட்சி சார்பாக போட்டால் இதுபோன்ற அவதூறு வழக்குகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. ஒட்டுமொத்த கட்சிக்கும் அவதூறு ஏற்பட்டதாக ஒரு சிவில் வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் வெற்றிபெறும் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. எனவே பழனிவேல் தியாகராஜன் தனக்கு அவகீர்த்தி ஏற்பட்டது என்றும், முழுமையான ஆடியோ தொகுப்பை தரவேண்டும் என்ற சட்டரீதியான கோரிக்கையையும் அவர் முன்வைக்கலாம். அப்போது அந்த குரல் தடய அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.

ஆடியோவை வைத்து மட்டமான அரசியல் செய்வதில் அண்ணாமலைதான் முன்னிலையில் இருக்கிறார். அதுவும் அவர் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற கடந்த இரண்டு வருடங்களில்தான் உட்கட்சியிலும், வெளியே அரசியல் செய்வதிலும் ஆடியோ, வீடியோக்களை பயன்படுத்துவது மிகவும் அதிகமாகிவிட்டது. 8 மணிநேரம், 12 மணிநேர வேலைகள் சர்ச்சையாகி வரும்போது, இவர்கள் 24 மணிநேரமும் இதே வேலையைத்தான் பார்க்கிறார்கள். மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு நான் பதிலளித்து விளம்பரம் தேடித்தர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருப்பது மிகவும் சரிதான் என்பதுதான் எனது அபிப்பிராயமும்கூட” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com