ஆதவ் அர்ஜூனாவிற்கு இருப்பது பதவி பேராசை... பகீர் கிளப்பும் லாட்டரி மார்ட்டின் மகன்..!
" என் தந்தையின் பணத்தை தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக்கொண்டே, எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு இருப்பது பதவி பேராசை" . ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தான் , இப்படி ஆதவ் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இவ்வளவு கோபத்திற்கு பின்னிருக்கும் காரணம் என்ன, வாருங்கள் பார்க்கலாம்.
தடாலடியான பேச்சுக்களுக்குச் சொந்தக்காரர் ஆதவ் அர்ஜூனா. வி.சி.க.வில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டநிலையில், அந்த கட்சியில் இருந்து முழுமையாக விலகி, தவெகவில் இணைந்த அவருக்கு தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. அவரின் சமீபத்திய பேச்சுக்களில் தொடர்ச்சியாக இடம்பெறும் ஒரு வார்த்தை 'மன்னராட்சி'. விசிகவில் இருந்தபோதும் சரி, அதற்குப் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பின்னரும் சரி, தமிழக முதல்வர் ஸ்டாலினின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்துக்கொண்டிருப்பவர் ஆதவ் ஆர்ஜூனா.
திமுகவில் தனக்கு சீட் கொடுக்கப்படாததே இந்த புகைச்சலுக்குப் பின்னிருக்கும் காரணம் என சொல்லப்பட்டது. ஊழல் கட்சி, மன்னராட்சி; இந்த மன்னராட்சியை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என திமுகவுக்கு எதிராக பேட்டியளித்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி நடந்த தவெக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய, ஆதவ் அர்ஜூனா, ”டெல்லியில் மோடியும் , தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சி செய்கிறார். இதெல்லாம் என்ன அரசியல்?. புலி மாதிரி விஜய் அமைதியாக செயல்பட்டு வரும் போது சம்பந்தமே இல்லாமல் ஒரு ஆடு வந்து தலையிடுகிறது” என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த அண்ணாமலை, “என் மாமனார் காசுல நான் வாழல, லாட்டரி வித்துக்கிட்டு சுத்தல, சொந்தமா உழைச்சு உங்க முன்னாடி நிக்கிறேன். லாட்டரி பணத்தை வைத்து, திமுகவில் இருந்து விசிகவிற்கு தாவி , அங்கிருந்து மறுபடியும் விஜய் கட்சிக்குத் தாவியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தை லாட்டரி விற்பனை கழகமாகவே மாற்ற வேண்டும் என்பதே அவரின் குறிக்கோள் " என்றார்.
இந்நிலையில், லாட்டரி மார்டினின் மகனான ஜோஸ் சார்லஸ், ஆதவ் அர்ஜூனாவின் பேச்சை கடுமையாக சாடி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இது குறித்த பேசிய அவர்,” தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக பாஜக தலைவர் திரு.கே. அண்ணாமலைக்கு எதிராக அர்ஜுன் ஆதவா வெளியிட்ட கருத்துக்கு எனது ஆட்சேபனையையும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு இருக்கும் அரசியல் மற்றும் நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ள பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி வைத்துக்கொண்டு அவரது மாமனார் அதாவது என் தந்தையின் பணத்தை தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக்கொண்டே, எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார். அவர் செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது தொடரும் பட்சத்தில், வழக்கு தொடரப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.