இங்கிலாந்தில் பென்னிக் குயிக் கல்லறை சேதம்:  வைகோ கண்டனம்

இங்கிலாந்தில் பென்னிக் குயிக் கல்லறை சேதம்: வைகோ கண்டனம்

இங்கிலாந்தில் பென்னிக் குயிக் கல்லறை சேதம்: வைகோ கண்டனம்
Published on

லண்டனில் ஜான் பென்னிக் குயிக் கல்லறையை உடைக்க முயன்ற சம்பவத்திற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: 

இங்கிலாந்தைச் சேர்ந்த கர்னல் ஜான் பென்னிக் குயிக், தென் மாவட்ட மக்களின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் உதவும் வகையில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, தமிழக மக்கள் மனதில் போற்றத்தக்க இடத்தைப் பெற்றவர்.

தனது சொத்துகளை விற்று, முல்லைப் பெரியாறு அணை எழுப்பியவர். இலண்டனிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரிம்லின் என்னும் ஊரில் உள்ள அவரது கல்லறையின் மீது இருந்த 3 டன் எடை கொண்ட சிலுவைக் கல் உடைக்கப்பட்டுள்ளது. தனி மனிதனால் உடைக்கும் வாய்ப்பு இல்லை. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது.

அருகில் உள்ள மற்ற கல்லறைகளை எதுவும் செய்யாமல், பென்னிக் குயிக் அவர்களின் கல்லறையை உடைக்க முயன்ற பின்னணி என்ன? என்ற கோணத்தில் இங்கிலாந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம் அவரது கல்லறையைப் பாதுகாக்க அரசிடம் கோரிக்கை வைத்தும் அது நிறைவேறாமல் அப்படியே இருக்கிறது.

தமிழக அரசும், இந்திய அரசும் பிரித்தானிய அரசோடு தொடர்புகொண்டு இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்லறைக்கு உரிய பாதுகாப்புக் கொடுக்கவும், வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com