தலைமைச் செயலகத்தில் அறைபோட்டு அரசுவேலை வாங்கித்தருவதாக மோசடி!

தலைமைச் செயலகத்தில் அறைபோட்டு அரசுவேலை வாங்கித்தருவதாக மோசடி!

தலைமைச் செயலகத்தில் அறைபோட்டு அரசுவேலை வாங்கித்தருவதாக மோசடி!
Published on

தலைமைச் செயலகத்துக்கு சொந்தமான அறையில் இருந்த ஒருவர் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்துவிட்டார் என்று உயர்நீதிமன்றத்துக்கு வந்துள்ள வழக்கு நீதிபதிகள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் தலைமைச்செயலகத்துக்கு சொந்தமான அறைகள் இருக்கின்றன. அங்குள்ள அறையில் இருந்த நாவப்பன் என்பவர், தான் அரசு நிர்வாகத்தின் துணை செயலாளர் என்ற அறிமுகத்தில் பலரிடம் வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த மோசடி குறித்து பாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

அதில் ''நாவப்பன் என்பவர் அரசு நிர்வாகத்தின் துணைச் செயலாளர் என்ற அறிமுகத்தில் என்னைப்போன்ற பலரிடம் வேலை வாங்கித்தருவதாக கூறினார். அரசு வேலை வாங்கித்தருவதாக நான் உட்பட 10 பேரிடம் தலா ரூ.7 லட்சம் வாங்கிகொண்டார். அனைவரையும் செயிண்ட் ஜார்ஜ் கட்டடத்திலுள்ள தலைமைச்செயலகத்துக்கு சொந்தமான அறைக்கு வர வைத்து அவர் பேசினார். முன்பணமாக ரூ.2 லட்சத்தை சென்னை கோட்டை ரயில்வே நிலையத்தில் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.  2016ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி நாங்கள் மொத்தமாக ரூ.20 லட்சத்தை அவரிடம் வழங்கினோம். அவர் அரசு வேலைக்கான போலியான நியமன உத்தரவுகளை அளித்துவிட்டு மீதிப்பணத்தையும் பெற்றுக்கொண்டார். கடந்த வருடம் செப்டம்பரின் தான் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்தது. எங்களைப்போல் மற்ற பலரிடமும் நாவப்பன் ரூ. 4 கோடி வரை மோசடி செய்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை கேட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு மோசடி பேர்வழிக்கு தலைமைச்செயலகத்தில் அறை எப்படி கிடைத்தது என்று அதிர்ச்சியில் உள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள நாவப்பன், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஏற்கெனவே கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தின் மூலம் ஜாமினில் வெளியேவந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது ஜாமினை ரத்து செய்து அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com