ஈரோட்டை அடுத்த ரகுபதி நாயக்கன்பாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 62 சவரன் நகைகளை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கெமிக்கல் ஏஜென்சி நடத்தி வரும் ராஜா என்பவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த அறையினை தாழிட்டு, பீரோவில் இருந்த 62 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். பின்னர் ராஜா கண் விழித்து பார்த்த அறை பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததே கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயையும் தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.