\
madurai tanishq showroom heist issue
madurai tanishq showroom heist issuePT

மதுரை நகைக்கடை கொள்ளை.. இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி கைது! ஒருவர் தலைமறைவு!

கொள்ளைச் சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் மூலம் முக்கிய ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!
Published on: 
Summary

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நடந்த பல கோடி ரூபாய் கொள்ளை சம்பவத்தில், சுரேஷ் மற்றும் மீனாட்சி கைது செய்யப்பட்டு, 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. தலைமறைவாக உள்ள நிஷாந்தை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக செயல்படுகிறது.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சுரேஷ் மற்றும் மீனாட்சி என்ற பெண் என இருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி
இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் முக்கியமாகத் தேடப்பட்டு வரும் நிஷாந்த் என்பவருடன் மீனாட்சி தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு நிஷாந்த் மீனாட்சியைத் தொடர்புகொண்டு பேசியிருப்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

madurai police
madurai police PT

தலைமறைவாக உள்ள நிஷாந்தைத் தேடி வந்த காவல்துறையினர், அவரது கடைசி செல்போன் இருப்பிடத்தை ஆய்வு செய்தபோது திருப்பூரில் அவர் இருந்ததற்கான தொழில்நுட்பத் தகவல் கிடைத்துள்ளது. அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் செல்போனைப் பெற்று, அதன் மூலம் மீனாட்சியைத் தொடர்புகொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பிறகு அவர் எங்கு சென்றார் என்பது குறித்த தகவல் கிடைக்காததால், அவரைப் பிடிக்கத் தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளைக்கு முன்பாக நிஷாந்த் இரண்டு முறை தனிஷ்க் நகைக்கடைக்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடை ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் ஓர் இளைஞர் இரண்டு முறை கடைக்கு வந்து கடையின் செயல்பாடுகளைக் கவனித்துவிட்டுச் சென்றதாக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த ஊழியரிடம் நகைக்கடையின் சிசிடிவி காட்சிகளைக் காண்பித்து அடையாளம் காணச் செய்தபோது, அவர் சம்பந்தப்பட்ட நபரைச் சரியாக அடையாளம் காட்டியுள்ளார். இதன் மூலம் கிடைத்த தடயத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

Madurai Tanishq case
Madurai Tanishq case ANi

விசாரணையின் தொடர்ச்சியாக சுரேஷ் மற்றும் மீனாட்சி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட நகைகள் தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்தானா என்பது உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்த்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைக்கடை கொள்ளை வழக்கில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டு சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், முக்கியமாகத் தேடப்படும் நிஷாந்த் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடித்தால் கொள்ளைச் சம்பவத்தில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள நகைகள் எங்கு உள்ளன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

madurai tanishq showroom heist issue
மதுரை நகைக்கடை கொள்ளை.. ரூட்டை மாற்றி ஹைதராபாத் விரைந்த தனிப்படை காவல்துறை!