திருச்சி - மும்பை நேரடி விமான சேவை ஜெட் ஏர்வேஸ் அறிமுகம்

திருச்சி - மும்பை நேரடி விமான சேவை ஜெட் ஏர்வேஸ் அறிமுகம்

திருச்சி - மும்பை நேரடி விமான சேவை ஜெட் ஏர்வேஸ் அறிமுகம்
Published on

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் முக்கால் நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாற்றில் முதன்முறையாக மும்பைக்கு நேரடி உள்நாட்டு விமான சேவையானது வருகின்ற மார்ச் 25ம் தேதி முதல் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தால் தொடங்கப்படுகிறது. இதே விமானம் தொடர்ந்து டெல்லி வரை செல்கிறது. இதற்கான கால அட்டவணை பின்வருமாறு.

தினசரி டெல்லியில் காலை 9.00 மணிக்கு புறப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானம் 9W358 ஆனது மும்பைக்கு 11.20 மணிக்கு வந்தடையும்.
பின்னர் மும்பையில் 12.25க்கு புறப்படும் அதே 9W358 விமானமானது 14.10 க்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடையும்.
பின்னர் எதிர்வழித்தடத்தில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 14.40 க்கு புறப்படும் 9W311 விமானமானது 16.50 க்கு மும்பை சென்றடையும். பின்னர் மும்பையில் இருந்து அதே 9W311 விமானமானது 18.00 க்கு புறப்பட்டு 20.20 க்கு டெல்லியைச் சென்றடையும்.

பல சவால்களைக் கடந்து ஜெட் ஏர்வேஸ் விமானநிறுவனம் இந்த சேவையைத் தொடங்க உள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தைப் பொறுத்த அளவில் துபாய், ஷார்ஜா, கொழும்பு, கோலாலம்பூர், சிங்கப்பூர் என வெளிநாட்டுச் சேவைகள் நிறைய இருந்தாலும், உள்நாட்டு சேவைகளில் சென்னையை தவிர்த்து இந்தியாவின் எந்த ஒரு விமான நிலையத்திற்கும் சேவைகள் இல்லாதிருந்தது பெருங்குறையாக இருந்தது. இந்தக் குறையை ஜெட் ஏர்வேஸானது மும்பையில் நேரடி விமானசேவையையும், மும்பை வழியாக டெல்லிக்கும் சேவை வழங்கவுள்ளது.

உள்நாட்டு சேவை என்றாலே திருச்சி மக்கள் சென்னை விமான நிலையத்தை சார்ந்திருந்தாக வேண்டிய சூழலை சிறிது மாற்றியுள்ளது, வரவிருக்கும் இந்த "திருச்சி - மும்பை" நேரடி விமானசேவை. ஆனால், மற்றொரு கோணத்தில் இந்த சேவையானது திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்னொரு வளைகுடா சேவையாகவே பார்க்கப்படுகின்றது.

ஏனெனில், இங்கு கிழக்காசிய நாடுகளுக்கு சேவை இருக்கும் அளவுக்கு அதைவிட தேவை அதிகமுள்ள வளைகுடா நாடுகளுக்கு சேவை இல்லை.ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆனது துபாய் மற்றும் சார்ஜா விமானநிலையங்களுக்கு நேரடி விமான சேவை வழங்கிவருகிறது.
இது தவிர மற்ற வளைகுடா விமானநிலையங்களுக்கு நேரடி விமானசேவை கிடையாது. ஏர் லங்கா விமான நிறுவனம் மட்டுமே தனது தினசரி இரண்டு சேவைகள் மூலம் அதனுடைய வணிக மையமான (Hub) கொழும்பு மூலம் மற்ற வளைகுடா விமானநிலையங்களுக்கு இணைப்பு விமானசேவை வழங்கிவருகின்றது.

மேலும் திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தைப் பொறுத்தமட்டில், எந்த ஒரு வளைகுடா நாடுகளின் விமானநிறுவனங்களுக்கும் சேவை வழங்க மத்திய அரசு பயணிகள் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லை. இந்திய விமானநிறுவனங்களும் இங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடி விமானசேவை வழங்க தயங்குகின்றன.

இந்தச்சூழலில், வளைகுடா நாடுகளுக்கான தேவை அபரிதமாக இருப்பதாலும், ஏர் லங்காவின் பயணக்கட்டணம் அதிகமாக இருப்பதாலும்,
வரக்கூடிய ஜெட் ஏர்வேஸின் "திருச்சி - மும்பை" நேரடி விமானசேவையை, வளைகுடா வாழ் தமிழர்கள் ஏர் லங்காவின் சேவைக்கு மாற்றுவழியாக பயன்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர். வழக்கமாக திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து ஏர் லங்காவில் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானப்பயணிகள் தங்களது குடியேற்றம் (Immigration) மற்றும் சுங்கம் (Customs) நடைமுறைகளை திருச்சிராப்பள்ளியிலேயே முடித்துவிடுவர்.அதேபோல் வளைகுடா நாடுகளில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு வரும் பன்னாட்டு பயணிகள், திருச்சிராப்பள்ளிக்கு வந்தடைந்த பின்னர் இங்கு தங்களது குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை நடைமுறைகளை முடித்துக்கொள்வர்.

ஆனால், திருச்சிராப்பள்ளியில் இருந்து ஜெட் ஏர்வேஸின் மும்பை விமானசேவை மூலம் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் அல்லது வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பன்னாட்டு பயனிகள் தங்களது குடியேற்றம் மற்றும் சுங்கம் நடைமுறைகளை திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் நிறைவு செய்வதற்கு பதிலாக மும்பை விமானநிலையத்தில் முடித்துக்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைகள் பற்றி விளக்கமாகக காண்போம். உதாரணமாக, திருச்சிராப்பள்ளியில் இருந்து ஜெட் ஏர்வேஸில் மும்பை வழியாக ஒரு பன்னாட்டு விமானபயணி குவைத்திற்கு செல்வதாக இருப்பின், அவர் தனது பயண உடைமைகளை (Luggage) திருச்சிராப்பள்ளியிலேயே சோதனை நடைமுறைகள் (Scanning) முடித்து, வருகை பதிதலில் (Check-in) பயண உடைமைகளை ஒப்படைத்துவிட்டால் அதை அவர் நேரடியாக குவைத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோல் இங்கேயே பயணிக்கு இரண்டு பதிவு அட்டைகளும் (Boarding Card), அதாவது திருச்சிராப்பள்ளியில் இருந்து மும்பைக்கு ஒன்றும், மும்பையில் இருந்து குவைத்திற்கு மற்றொன்றுமாக வழங்கப்படும். புறப்பாடு குடியேற்ற நடைமுறைகளை மட்டும் (Immigration) மும்பையில் முடித்துக்கொள்ளவேண்டும்.இதில் சிரமம் ஏதுமில்லை. ஏனென்றால் ஜெட் ஏர்வேஸின் அனைத்து உள்நாட்டு (Domestic) மற்றும் வெளிநாட்டு (International) விமானசேவைகளும் மும்பை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்திலேயே (International Terminal) நடைபெறும். ஆகவே உள்நாட்டு முனையத்திலிருந்து பன்னாட்டு முனையத்திற்கு மாறவேண்டிய சிக்கல் இல்லை.

மேலும் பன்னாட்டு இடைத்தங்கல் (International Transit) பயணிகளின் வசதிக்காக குடியேற்றப்பிரிவில் (Immigration) சிறப்பு வசதிகளும் மும்பை விமானநிலையத்தில் ஜெட் ஏர்வேஸால் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சம் 15 நிமிடங்களுக்குள் குடியேற்ற நடைமுறைகள் முடிந்துவிடும். கால்கடுக்க காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. பின்னர் குவைத் விமானத்திற்கான அழைப்பு வந்ததும் நேரடியாக பாதுகாப்புச் சோதனைக்கூடத்தை அனுகலாம் (Securiy Hold Area). ஏனென்றால் திருச்சிராப்பள்ளி விமானநிலையத்திலேயே குவைத் வரை ஏற்கனவே பயணப்பதிவு அட்டைகள் (Boarding Card) வழங்கப்பட்டிருப்பதால் நேரடியாக பாதுகாப்புச் சோதனையை முடித்து குவைத் செல்லும் விமானத்தை அணுகலாம்.

அதேபோல் குவைத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு வரும் பட்சத்தில்,குவைத்திலேயே "குவைத் - மும்பை" வழித்தடத்திற்கும் "மும்பை - திருச்சிராப்பள்ளி" வழித்தடத்திற்கும் பயணப்பதிவு அட்டைகள் வழங்கப்பட்டுவிடும்.மும்பை வந்தடைந்தவுடன்,மும்பைலேயே குடியேற்ற (Immigration) நடைமுறைகளை முடிக்கவேண்டும். குறைந்தது 50 க்கும் மேற்பட்ட குடியேற்றப்பிரிவு வரிசைகள் (Counters) உள்ளதால் விரைவில் காலதாமதமின்றி குடியேற்ற நடைமுறைகள் முடிந்துவிடும்.அதற்கடுத்து தங்களது பயணஉடைமைகளை கோருதல் நடைமுறையை (Baggage Claim) மும்பைலேயே முடிக்கவேண்டும். பின்னர் பயணிகள் தங்களது பயணஉடைமைகளை சுங்கத்துறை (Custims) சோதனைக்குட்படுத்த வேண்டும்.அதாவது தங்களது சுங்க நடைமுறைகளை மும்பைலேயே முடிக்கவேண்டும். அங்கு இடுப்புக்கச்சை, காலணி, போன்ற உடைமைகளை கழட்டச்சொல்லும் தொந்தரவுகள் இருக்காது. நிச்சயம் பன்னாட்டு விமானபயணிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கும். பயணிகள் எதிர்பார்ப்பதைவிட சுங்கத்துறையினர் மரியாதையாக நடத்துவர். பின்னர் பயணிகள் தங்களது பயணஉடைமைகளை இடைத்தங்கல் மையத்தில் (Transfer desk) ஒப்படைத்துவிட்டு தங்களது "மும்பை - திருச்சிராப்பள்ளி" உள்நாட்டு சேவைக்காக காத்திருக்கலாம்.
பின்னர் திருச்சிராப்பள்ளி வந்தடைந்தவுடன் மீண்டும் தங்களது பயண உடைமைகளை கோரிய பின்னர் திருச்சிராப்பள்ளியில் குடியேற்றம் மற்றும் சுங்க நடைமுறைகள் ஏதுமின்றி உள்நாட்டு விமானபயணிகள் போல விமானநிலையத்திலிருந்து வெளியேறலாம். திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் குடியேற்றம் மற்றும் சுங்கத்துறையினை அனுகவேண்டிய அவசியமே கிடையாது. ஏனென்றால் ஏற்கனவே மும்பை விமானநிலையத்தில் அனைத்து நடைமுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.இந்த நடைமுறை குவைத் மட்டுமல்ல அனைத்து வளைகுடா உள்ளிட்ட பன்னாட்டு விமானசேவைகளுக்கும் பொருந்தும்.


முதன்முறையாக "திருச்சிராப்பள்ளி - மும்பை" வழித்தடத்தில் பன்னாட்டு விமானப்பயனம் மேற்கொள்ளும்போது சிறிது அசௌகரியமாக உணரலாம். ஆனால் அடுத்தடுத்த பன்னாட்டு பயணங்களில் சரியாகிவிடும்.ஜெட் ஏர்வேஸானது "திருச்சிராப்பள்ளி - மும்பை" வழித்தடத்தில்
வளைகுடா நாடுகளைப் பொறுத்து,மும்பையில் இருந்து,துபய்க்கு உடனடி இணைப்பு விமானசேவைகளையும்,குறிப்பிட்ட காத்திருப்பு இடைவெளியில்,பஹ்ரைன், தம்மாம், தோஹா, ஜித்தா, குவைத், மஸ்கத் மற்றும் ரியாத் விமானநிலையங்களுக்கு சேவை வழங்குகிறது.

இந்த மேற்சொன்ன வழித்தடங்களில்,சலுகைக் கட்டணங்களை அறிவித்துள்ளது.40 கிலோ பயண உடைமைகளை அனுமதித்துள்ளது.
(வழக்கமான பயண உடைமை அனுமதி 30 கிலோ ஆகும்).மும்பை விமானநிலையத்தில், இணைப்பு விமானத்திற்கு காத்திருக்கும் நேரத்தில் இலவச சிற்றுண்டி வசதியும் செய்துள்ளது.எதிர்காலத்தில் சென்னை, கொச்சி மற்றும் பெங்களுரு விமானநிலையங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வழக்கமாக நிர்ணயிக்கப்படும் பயணக்கட்டணங்களை அடிப்படையாக வைத்து,திருச்சிராப்பள்ளியில் இருந்து மும்பை வழியாக வளைகுடா நாடுகளுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு பயணக்கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என உறுதியளித்துள்ளது.

குவைத்தைப் பொறுத்தமட்டில்,ஏற்கனவே "திருச்சிராப்பள்ளி - குவைத்" வழித்தடத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதிலிருந்து இன்றுவரை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கமானது (K-Tic) தொடர்ந்து "திருச்சிராப்பள்ளி - குவைத்" நேரடி விமானசேவையை மீட்டெடுக்க பல வழிகளில் முயன்று வருகின்றது. இது சம்பந்தமாக K-Tic ஆனது ஜெட் ஏர்வேஸிடமும் பேசியது.
இதைக்கருத்தில் கொண்டு,"திருச்சிராப்பள்ளி - மும்பை" விமானசேவையில் எந்த அளவுக்கு குவைத் பயணிகளின் பங்களிப்பு இருக்கிறது என்பதை அளவுகோலாக வைத்து,"திருச்சிராப்பள்ளி - மும்பை" விமானசேவையைப் பயன்படுத்தும் குவைத் பயணிகள் எண்ணிக்கை திருப்திகரமாக இருப்பின்,விரைவில் ஜெட் ஏர்வேஸானது,திருச்சிராப்பள்ளியில் இருந்து குவைத்திற்கு நேரடி விமானசேவை வழங்கவும் ஆயத்தமாக உள்ளது.எனவே குவைத் வாழ் தமிழர்கள் தங்கள் பயணத்திற்கு இந்த "திருச்சிராப்பள்ளி - மும்பை" நேரடி விமானசேவையைப் பயன்படுத்த வேண்டுகிறோம்.

குவைத் மட்டுமல்ல,எந்த வளைகுடா விமானநிலையத்திற்கும், பயணிகளின் வரவேற்பு மற்றும் பங்களிப்பைப் பொறுத்து அந்த வளைகுடா விமானநிலையத்திற்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து நேரடி விமானசேவை வழங்க வாய்ப்புள்ளது.எனவே,திருச்சிராப்பள்ளியில் இருந்து,
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் துபாய் மற்றும் ஷார்ஜா தினசரி சேவைகள்,ஏர் லங்காவின் தினசரி இரண்டு சேவைகளுக்கு அடுத்து ஐந்தாவதாக வளைகுடா நாடுகளுக்கு இணைப்பு விமானசேவை வழங்கும் ஜெட் ஏர்வேஸின் "திருச்சிராப்பள்ளி - மும்பை" நேரடி விமானசேவை  தொடங்க உள்ளது.

தகவல் - சார்லஸ், புதிய தலைமுறை, திருச்சி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com