காஞ்சிபுரத்தில் எரித்துக் கொல்லப்பட்டவர் கேரள மாணவி அல்ல: வழக்கில் திடீர் திருப்பம்!
காஞ்சிபுரத்தில் எரித்துக்கொல்லப்பட்ட இளம் பெண், கேரள மாணவி அல்ல என்பது தெரிய வந்துள்ளது.
கேரளா மாநிலத்தில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அப்பா மற்றும் சகோதரனுடன் வசித்து வருபவர் ஜேசா. இவர் காஞ்சிரப்பள்ளியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 22 அன்று ஜேசா, மாயமானார். இதுகுறித்து பத்தனம்திட்டா போலீ சார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் 50 நாள் கடந்த பின்பும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாததால் காணாமல் போன 20 வயது கல்லூரிப் பெண் ஜேசா பற்றி தகவல்களுக்கு கொடுப்பவர்களுக்கு ரூ 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியில் கடந்த 28ஆம் தேதி இளம்பெண் ஒருவர் எரித்துக் கொல்லப் பட்டு கிடந்தார். இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் காணாமல்போன ஜேசாவின் வயது, உயரம், எடை உடலில் உள்ள சில அடையாளங்கள் இந்த உடலிலும் காணப்பட்டதால் சந்தேகத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, கேரள போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கேரள போலீசார் இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுடன் ஜேசாவின் சகோதரர் ஜேசனும் வந்தி ருந்தார். எரித்துக்கொல்லப்பட்ட பெண்ணின் உடலைப் பார்த்த இவர், அது தன் தங்கை இல்லை என்றார். டிஎன்ஏ சோதனை செய்ய இருந்தால் அதற்கு உடன்படுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தகவல்கள்: பிரசன்னா.