மிகப்பெரும் விபத்தில் உடைந்த 38 எலும்புகள்.. ஜெர்மி ரென்னர் உயிருக்குப் போராடி மீண்டது எப்படி?
“மூச்சில் கவனம் செலுத்தினேன். அதன் மூலமே உயிர் பிழைத்தேன்” என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரும் பனி இயந்திர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி மீண்ட அனுபவம் குறித்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர் தன் புதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
தி ஹர்ட் லாக்கர், தி அவஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களில் நடித்தவர் ஜெர்மி ரென்னர். 2023 புத்தாண்டு தினத்தன்று, 6,500 கிலோ எடையுள்ள பனி இயந்திரத்தை இயக்கும்போது அதில் சிக்கி, அவரது உடலில் 38 எலும்புகள் உடைந்த நிலையில் கோமா நிலைக்குச் சென்றார். இந்த விபத்திலிருந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மீண்ட அனுபவத்தை, சமீபத்தில் வெளியாகியுள்ள ‘My Next Breath’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
“மூச்சுதான் என்னை காப்பாற்றியது. இயந்திரத்தில் சிக்கி நசுங்கி கிடந்த நிலையில் என்னுள் நான் சொல்லிக் கொண்டது இதுதான். “மூச்சில் கவனம் செலுத்து. அது உன்னை காப்பாற்றும்”. என் உடல் நிலை குறித்து, அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பது குறித்தெல்லாம் நான் சிந்திக்கவில்லை. ஆழமாக மூச்சுவிடத் தொடங்கினேன். அதுவே என் உயிரைத் தக்கவைத்தது” என்கிறார்..
“நான் மீண்டு வருவதற்கு என் மகளே எனக்கு ஊக்க சக்தியாக இருந்தாள். அவளை தன்நம்பிக்கைமிக்கவளாக பார்க்க விரும்பினேன். அவளுக்காகவே விரைந்து மீண்டெழுத் தொடங்கினேன். எழுத்து எனக்கு ஒரு சிகிச்சையாக இருந்தது. தினமும், என் அனுபவங்களை எழுதினேன். ஒரு பக்கம் கடினமாக இருந்தாலும், அது என்னை மன ரீதியாக குணப்படுத்தியது. இந்த விபத்து, வாழ்க்கை குறித்த என் பார்வையையே மாற்றிவிட்டது. உண்மையில், குடும்பமே முதன்மையானது. வேலையெல்லாம் இரண்டாம்பட்சம்தான். வாழ்க்கையை நேர்மறையாக அணுக வேண்டும். நம் முன் இருக்கும் நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும்” என்பதை இந்த விபத்து தனக்கு கற்றுத் தந்ததாக கூறுகிறார் ஜெர்மி ரென்னர்.