தமிழ்நாடு முதல்வர்களின் பாதுகாப்பு கான்வாய் அமைப்பு
தமிழ்நாடு முதல்வர்களின் பாதுகாப்பு கான்வாய் அமைப்புpt

’ஜெயலலிதா To விஜய் வரை..’ பிரமாண்டமான முதல்வரின் கான்வாய்.. முழு விவரம் உள்ளே !

தமிழ்நாடு முதல்வரின் கான்வாய்க்கு எத்தனை வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பது குறித்தும், முன்னாள் முதல்வர்களின் கான்வாய் விவரங்கள் குறித்தும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Published on
Summary

தமிழ்நாடு முதல்வர்களின் பாதுகாப்பு கான்வாய் அமைப்பு, ஜெயலலிதாவின் JULIET முதல் ஜோசப் விஜயின் TANGO வரை எப்படி மாறி வந்தது என்பதை இந்த செய்தி விளக்குகிறது. ஜீரோ ட்ராஃபிக், Tunneling போன்ற முறைகள், 300-500 போலீசார் வரை ஈடுபடும் பாதுகாப்பு, பொதுமக்கள் சந்திக்கும் நெரிசல், காவல்துறையின் பணிச்சுமை ஆகியவை விரிவாக கூறப்படுகின்றன.

தமிழ்நாடு முதல்வர்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஆயுதமேந்திய வீரர்கள் அடங்கிய பாதுகாப்பு வழங்கப்படும். அந்த வகையில் முதல்வர் வாகனத்துடன் கருப்பு நிற கார்கள் மற்றும் எஸ்யூவி (SUV) வாகனங்கள், ஆயுதமேந்திய பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் ஜாமர் கருவிகள், கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள், குண்டு துளைக்காத வாகனங்கள் என மொத்தம் 12 முதல் 14 வாகனங்கள் பாதுகாப்புக்கு வரும்.

இந்த கான்வாய் பிரிவின் கீழ் சுமார் 55 பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்பிற்கு இருப்பார்கள். இதில் 10-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள் இடம் பெற்றிருப்பார்கள். மேலும் நவீன MP5 ரகத் துப்பாக்கிகள் மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்ட பயிற்சி பெற்ற கமாண்டோக்களும் இருப்பார்கள். புல்லட் புரூஃப் வாகனங்கள் (Bulletproof vehicles), பைலட் வாகனங்கள் மற்றும் தங்கும் இடத்தில் 24x7 கண்காணிப்பும் இதில் அடங்கும்.

முதல்வர் வீட்டிலிருந்து தலைமைச் செயலகம், தலைமைச் செயலகத்திலிருந்து அவரின் வீடு மற்றும் அரசு/ தனியார் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் செல்லும் வழித்தடங்களுக்கு உயர் ரக பாதுகாப்பான முதல்வர் கான்வாய் வழங்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கான்வாய்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கான்வாய் பெயர் ஜூலியட்(JULIET). மறைந்த முதல்வர் ஜெயலலிதா கான்வாய் என்றாலே பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் பெரும் சிரமம் என்கின்றனர் காவல்துறையினர். குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா கான்வாய் வருகையின் போது Zero Traffic முறை கடைப்பிடிக்கப்படும். அதாவது முதல்வர் கான்வாய் வீட்டில் இருந்து தலைமைச் செயலகம் அல்லது பிற அரசு/தனியார் நிகழ்ச்சிக்கு செல்லும் போது சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பே முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்படும்.

இதனால் பொதுமக்கள் மிகப்பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர் என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். மேலும், கான்வாய் ரூட் பாதுகாப்பு பணி 4 மணி நேரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடும் என்பதால் காவல்துறையினர் பெரும் கஷ்டங்களை சந்தித்து வந்தனர் என்கின்றனர் அதிகாரிகள்.

மேலும், அவரின் கான்வாய்க்காக A,B,C என மூன்று ரூட்கள் போடப்படும். ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 3 ரூட்கள் போடப்பட்டதாகவும், இதற்காக 400-500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கான்வாய்:

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கான்வாய் பெயர் எக்கோ(ECHO). முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கான்வாயின் போது பெரும் சவாலான Zero Traffic System கடைபிடிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டது என்கின்றனர் காவல்துறையினர்.

மேலும், கான்வாய் செல்லும் போது மட்டும் 10 நிமிடங்களுக்கு முன் பொது போக்குவரத்து அந்தந்த சிக்னல்களில் நிறுத்தப்பட்டு கான்வாய் சென்ற 4 நிமிடங்களுக்கு பிறகு பொது போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது. முக்கிய சாலைகள் தவிர்த்த இடங்களில் அல்லது சந்திப்புகளில் சில நிமிடங்கள் பொது போக்குவரத்தை நிறுத்த வேண்டியது பாதுகாப்பு கட்டாயம் என்கின்றனர் காவல்துறையினர்.

ECHO கான்வாயின் போது சுமார் 400 போலீசார் வரை பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். அதேபோல கான்வாய் ரூட்க்கு 3 மணி நேரத்திற்கு முன் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் கான்வாய்:

முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் கான்வாய் பெயர் விக்டர்(VICTOR). அதே போல முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் கான்வாயின் போது Zero Traffic நடைமுறை ஆரம்பத்தில் சில நாட்கள் கடைபிடிக்கப்பட்டது. அதன் பிறகு பொதுபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்ததால் அதன் பின் Zero Traffic நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை. இதற்கு பதிலாக, Tunneling முறை கடைப்பிடிக்கப்பட்டது.

முதலமைச்சர் கான்வாய்
முதலமைச்சர் கான்வாய்

Tunneling முறை என்பது முக்கிய சாலைகளில் பொதுமக்கள் செல்வதற்கு இணையாக கான்வாய் வாகனங்கள் செல்லும் முறையாகாது. அதாவது முக்கிய சாலைகள் கூம்பு வைத்து இரண்டாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பகுதியில் கான்வாயும், மற்றொரு பகுதியில் பொது போக்குவரத்தும் செல்லும். எனினும் பாதுகாப்பு கட்டாயம் காரணமாக முக்கிய சாலைகள் தவிர்த்த இடங்களில் சில நிமிடங்கள் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த கான்வாய்க்காக சுமார் 300 போலீசார் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பாக கான்வாய் பகுதியில் 2 மணி நேரத்துக்கு முன்பு காவல்திறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர் என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.

முதல்வர் ஜோசப் விஜய் கான்வாய்:

முதல்வர் ஜோசப் விஜயின் கான்வாய் பெயர் டாங்கோ (TANGO). தற்போதைய முதல்வர் ஜோசப் விஜயின் கான்வாயில் முந்தைய முதல்வருக்கு கடைபிடிக்கப்பட்ட Tunneling நடைமுறையே தற்போதும் முதல்வருக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இருந்தபோதிலும் முக்கிய சாலைகள் தவிர்த்த பிற இடங்களில் அல்லது சந்திப்புகளில் சில நிமிடங்கள் பொது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. முதல்வர் இல்லமான நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகம் வரை சுமார் 400 நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகம் வரை உள்ள 17 கிலோ மீட்டர் தூரம் ரூட் போடப்படுவதால் சுமார் 25 நிமிடங்கள் வரை நேரமாவதாகவும், அதனால் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் காவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படுவதாகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய காரணங்களால் முதல்வர் ஜோசப் விஜய் பட்டினம்பாக்கம் அலுவலகம் அல்லது அரசு மாளிகை ஆகியவற்றில் குடியேறினால் மக்கள் மற்றும் காவல்துறையினருக்கு நெருக்கடி குறைக்கப்படும் சூழல் உருவாகுமென பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com