கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருந்த இடம் போயஸ் கார்டன்.
போயஸ் தோட்டம் என்றாலே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு வரும் அளவுக்கு பிரசித்தி பெற்றது இங்குள்ள வேதா இல்லம். பல அரசியல் திருப்பங்களுக்கு காரணமாக அமைந்த வேதா இல்லம் எப்படி இருக்கும் தெரியுமா?
சென்னை நகரின் மையப் பகுதியில் உள்ள போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ளது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம். இதன் பரப்பளவு ஏறக்குறைய 24 ஆயிரம் சதுர அடி பரந்துவிரிந்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரது தாயார் சந்தியாவும் இணைந்து 1967 ஆம் ஆண்டு ரூ.1.32 லட்சத்திற்கு இந்த இடத்தை வாங்கி வேதா இல்லத்தை உருவாக்கினர். ஆனால், வேதா இல்லம் முழுமையடையும் முன் சந்தியா காலமானார். இந்த வேதா இல்லம், பிரமாண்ட கதவுகளுடன் கூடிய இரு கட்டடங்களை கொண்டது.
நுழைந்தவுடன் வலது புறம் உள்ள கட்டடத்தின் கீழ் தளத்தில் தனி பாதுகாப்பு அலுவலருக்கான அறை உள்ளது. இக்கட்டடத்தின் 2வது தளத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறையும் இதற்கு மேல் உள்ள 3வது தளத்தில் முதல்வரின் தனிச் செயலாளர் அறையும் அமைந்துள்ளன. இந்த கட்டடத்திற்கும் அருகிலுள்ள முக்கிய கட்டடத்துக்கும் இணைப்பு பாதை ஒன்றும் உள்ளது. முக்கிய கட்டடத்தின் மேல் தளத்தில் ஜெயலலிதாவின் அறையில் வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை, இது தவிர அதேதளத்தில் பார்வையாளர்கள் அறை, சசிகலாவின் அறை என 2 அறைகள் உள்ளன. இதில் தற்போது ஜெயலலிதா அறை தவிர மற்ற இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.