அப்போலோவுடன் சேர்ந்து சதி செய்தேனா? - சுகாதாரத் துறை செயலாளர் வேதனை

அப்போலோவுடன் சேர்ந்து சதி செய்தேனா? - சுகாதாரத் துறை செயலாளர் வேதனை

அப்போலோவுடன் சேர்ந்து சதி செய்தேனா? - சுகாதாரத் துறை செயலாளர் வேதனை
Published on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில், அப்போலோவுடன் சேர்ந்து சதி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். 70-க்கும் மேற்பட்ட நாளாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே சிகிச்சைக்காக ஜெயலலிதா ஏன் வெளிநாடு அழைத்துச் செல்லப்படவில்லை என பலரும் கேள்வி எழுப்பினர். 

அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல புகார்கள் எழுந்ததால், இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சார்பில் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த விவரங்களை அளித்து வருகின்றனர்.

இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்க்கக்கோரி ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் முகமது கபருல்லா கான் ஆணையத்தின் முன் கடந்த 27ஆம் தேதி மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஏற்கனவே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. தவறான பதிவு மற்றும் சரியான புரிதல் இல்லாததால் மருத்துவர் மீதும், மருத்துவமனை மீதும் மிக மோசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக அப்போலோ தனது விளக்கத்தில் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “என் மீதான குற்றச்சாட்டு தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தனக்கு மிகுந்த மன வேதனையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய சக்திக்கு உட்பட்டு பணியை செய்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், “மேல் சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லாதது முற்றிலும் மருத்துவ ரீதியான முடிவு. இதில் நிர்வாக ரீதியாக அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவுக்கும் வெளிநாடு செல்வதில் உடன்பாடில்லை. ஜனவரி 4ம் தேதி என் தரப்பு விசாரணையில் அனைத்து புகார்களுக்கும் விளக்கம் அளிப்பேன்” என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் கூறுகையில், தான் தற்போது வெளியில் இருப்பதாகவும், செய்தி குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com