ராஜீவ் கொலை வழக்கு முதல் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குவரை: நல்லம நாயுடு வாழ்க்கை பக்கம்

ராஜீவ் கொலை வழக்கு முதல் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குவரை: நல்லம நாயுடு வாழ்க்கை பக்கம்
ராஜீவ் கொலை வழக்கு முதல் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குவரை: நல்லம நாயுடு வாழ்க்கை பக்கம்
நல்லம நாயுடு சமர்ப்பித்த ஆதாரங்கள் அடிப்படையில்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டனர்.
 
தேனி மாவட்டம் குப்பி நாயக்கம்பட்டி எனும் குக்கிராமத்தில் 1939-ஆம் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் நல்லம நாயுடு . பள்ளிப்படிப்பை தேனியிலும், கல்லூரி படிப்பை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் முடித்த நல்லம நாயுடு, சிறுவயதிலிருந்து விளையாட்டுப் போட்டிகளிலும் உடல்நலத்தை பேணுவதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
 
கல்லூரி படிப்பு முடிந்ததும், ஸ்டேட் பாங்க், இந்தியன் ரயில்வே, காவல் துறை ஆகிய மூன்று பணிகளுக்கும் வேலை வேண்டி விண்ணப்பம் கொடுத்திருந்தார். இந்த மூன்று பணிகளும் அவருக்கு கிடைத்தாலும் அவர் தேர்ந்தெடுத்த பணி, காவல்துறை. 1961ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக தமது காவல்துறை பணியைத் தொடங்கிய நல்லம நாயுடு, பொது மக்களிடம் நெருங்கி பழகும் அதிகாரியாகவும் நேர்மையானவராகவும் அறியப்படுகிறார்.
1965-இல் நடந்த கடையநல்லூர் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஊழல், 1971இல் திருப்பத்தூர் தெற்கு வீட்டில் நடந்த கொலை வழக்கு, 1985இல் சென்னை மாநகரில் பாக்கெட் சாராயம் விற்பனையை குறைத்தது உள்ளிட்ட அதிரடி செயல்பாடுகளால் காவல் துறையில் பதவி உயர்வு பெற்றார். 1987ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற நல்லம நாயுடு, 1991ஆம் ஆண்டு நடந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழக அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு புலனாய்வு அதிகாரியாக அப்போதைய திமுக அரசால் நியமிக்கப்பட்டார்.
 
ஜெயலலிதாவின் வருமானங்களையும் சொத்துக்களையும் ஆரம்ப நிலையிலிருந்து முழுவதுமாக கணக்கிட்ட நல்லம நாயுடு, போலி தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டது பற்றியும் சொத்துக்கள் வாங்கப்பட்டது பற்றியும் விசாரணை நடத்தி ஆவணங்கள் மூலம் துல்லியமாக நிரூபித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரையும் சேர்த்ததற்கு நல்லம்ம நாயுடுவின் பங்கு முக்கியமானது. 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போது சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்த வந்த நல்லம நாயுடுவை, 'வேறு தலைவர்களை இப்படி சிறைக்கு வந்து விசாரிப்பீர்களா என்று நல்லம நாயுடுவிடம் ஜெயலலிதா சீறினார்' என்று அப்போதே தகவல்கள் வந்தன.
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் 6 ஆண்டுகளாக பணியாற்றிய நல்லம நாயுடு, 2,341 சான்று ஆவணங்களையும் 1,606 சான்று பொருட்களையும் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த ஆதாரங்கள் அடிப்படையில் தான் 2014-ஆம் ஆண்டு பெங்களூரு சிறையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டார். 2001-இல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஜெயலலிதா கையால், ஆளுநரின் தங்க பதக்கம் வாங்கும், சூழல் நல்லம நாயுடுவுக்கு ஏற்பட்டபோது, அதிகாரிகள் தடுத்துபோதும் அந்த விழாவுக்கு வருவதில் உறுதியாக இருந்தார். ஆனால், மேலிட அதிகாரிகள் அவரை தடுத்து, விருதை வீட்டுக்கே அனுப்பி வைத்த நிகழ்வும் நடந்தது. 1997ம் ஆண்டு பணி காலம் முடிந்து ஓய்வு பெரும் நிலையில், தமிழக அரசு இரண்டு முறை அவருடைய பணிக்காலத்தை நீட்டித்தது.
2002ஆம் ஆண்டு நல்லம நாயுடுவே விருப்ப ஓய்வு பெற்று விலகினார். சென்னை, விழுப்புரம், மதுரை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் காவல் துறையில் முக்கிய பிரிவுகளில் பணியாற்றிய நல்லம நாயுடு நேர்மையான அதிகாரி என்று அறியப்படுகிறார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை 'என் கடமை' என்ற நூலில் அவரே எழுதியுள்ளார். குடியரசுத்தலைவர் விருதுகள், தமிழக முதல்வரின் சிறந்த காவலர்கள் விருதுகள், ஆளுநரின் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் நல்லம நாயுடு.
இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் முழு மனதுடன் ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்கின்ற உணர்வு அவசியம் என குறிப்பிடும் நல்லம நாயுடு, 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் பேரவள்ளூர் உள்ள அவரது இல்லத்தில் இன்று இயற்கை எய்தியிருக்கிறார்.
- ந. பால வெற்றிவேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com