ஜெ. மரணம் தொடர்பாக 8 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக திமுகவின் சரவணன் உள்ளிட்ட 8 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆதாரம் மற்றும் தகவல்களை யார் வேண்டுமானலும் தபால் அல்லது பிரமாணப் பத்திரிமாக தாக்கல் செய்யலாம் என விசாரணை ஆணையம் தெரிவித்திருந்தது. அத்துடன் தகவல்களை நவம்பர் 20ஆம் தேதிக்குள் அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை 70க்கும் மேற்பட்டோர் எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகத்திற்கு தகவல்களை அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் 8 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதில் திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த சரவணன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.ஆனூர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பிரமாணப் பத்திரம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சரவணன் வரும் 22ஆம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், மற்றவர்களுக்கும் விசாரணை ஆணையம் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கிடையே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.