வாரிசு சான்றிதழ் கேட்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மனு
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என வாரிசு சான்றிதழ் வழங்குமாறு சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீபக் மனு அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைய வேண்டுமென்றால், ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதிவிசாரணை வேண்டும், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணி கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்றும், ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். இதனால் இரு அணிகளும் இணைந்தது. பின்னர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடமையாக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என வாரிசு சான்றிதழ் வழங்குமாறு தீபக் மனு அளித்துள்ளார்.

