”சட்டசபையில் அதிமுக பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது” - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

”சட்டசபையில் அதிமுக பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது” - ஜெயக்குமார் குற்றச்சாட்டு
”சட்டசபையில் அதிமுக பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது” - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தமிழகத்தில் மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அவசியம் இல்லை என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதற்காக அந்த மசோதா தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், சுமார் 3 மாதங்களுக்கும் மேலாகியும் குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பி வைக்கப்படவில்லை. இந்த சூழலில், கடந்த 1-ம் தேதி நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். அதில், பொருளாதரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் நலன்களுக்கு எதிராக இந்த மசோதா இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு ஆளுங்கட்சியான திமுக உட்பட பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை இன்று கூட்டிய தமிழக அரசு, மீண்டும் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பாஜக மட்டும் வெளிநடப்பு செய்தது. இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிமுக மூத்த தலைவர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியபோது, "தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு ஆகும். சட்டப்பேரவை பேராயுதமாக விளங்குகிறது. ஆனால், பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. துதிபாடும் கூட்டணிக் கட்சிகளுக்கே பேச அனுமதி வழங்கப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. பேரவைத் தலைவர் அப்பாவு நடுநிலையோடு செயல்படவில்லை. திமுக, காங்கிரஸ் செய்த துரோகம் மக்களுக்கு தெரியும். ஆட்சிக்கு வந்ததும் நீட் குறித்த கையெழுத்தை அரசு ஏன் போடவில்லை?" என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com