மீனவர்கள் மீதான தாக்குதல் - மத்திய, மாநில அரசுகள் மௌனம் காப்பது ஏன்? ஜெயக்குமார் கேள்வி
செய்தியாளர்: சந்தான குமார்
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் பொன்னையன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசியபோது...
தொழிற்சாலைகளை ஈர்க்க வெளிநாடு செல்வதில் எனக்கு முரண்பாடு இல்லை. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் என்ன ஹிடன் அஜெண்டா இருக்கிறது என்று ஆண்டவனுக்குதான் வெளிச்சம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் மின்வெட்டு ஏற்படுகிறது. கடுமையான மின்சார கட்டண உயர்வு. இதனால் தமிழ்நாட்டில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையால் ஒரு ஆண்டில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்படும் நிலை இந்த ஆட்சியில் நீடிக்கிறது. கிரிக்கெட் போட்டியில் இலங்கை தோற்கடிக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக வேண்டுமென்றே மீனவர் படகு மீது மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் வாய் மூடி அமைதியாக உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் இலங்கை அரசு பயபட்டனர். ஆனால், கடந்த ஒராண்டில் அதிக அளவிலான தாக்குதல் நடைபெற்று வருகிறது,
ஆளுநர் பதவி நீட்டிப்பது குறித்து ஸ்டாலின், நான் என்ன பிரதமரா அல்லது குடியரசுத் தலைவரா என்று கேட்கிறார். இந்த ஆசைவேறு ஸ்டாலினுக்கு இருக்கிறதா?
ஆளுநருக்கு மீண்டும் பதவி கொடுப்பது மத்திய அரசின் நிலைப்பாடு. அரசியலமைப்புச் சட்டப்படி ஆட்சி நடத்த வேண்டும் என பிரதமர் கூறி வருகிறார். ஆனால், வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல் மாநில அரசுகளுக்கு உரிமையை வழங்க வேண்டும்" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.