கொடுங்கையூர் சிறுமிகள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி வழங்கினார் ஜெயக்குமார்
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்திருந்த ரூ.3 லட்சம் நிதியை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
கொடுங்கையூர் சென்ற அமைச்சர் ஜெயக்குமார், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஏற்கனவே 7 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையான ரூ.3 லட்சத்தை வழங்கினார். அத்துடன் சிறுமிகளின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓட்டேரி நல்லான் கால்வாய் உள்ளிட்ட தூர்வாரப்பட்ட பணிகளை ஆய்வு செய்ததாகக் கூறினார். அத்துடன் கொசஸ்தலை ஆற்றில் வடிகால்கள் அமைக்க மத்திய அரசிடம் ரூ.1,500 கோடி நிதி கேட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக அயனாவரத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, கருப்பணன், மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது, மழை நீர் தேங்கா வண்ணம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.