ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனின் 100 வங்கிக் கணக்குகள் முடக்கம்?

ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனின் 100 வங்கிக் கணக்குகள் முடக்கம்?
ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனின் 100 வங்கிக் கணக்குகள் முடக்கம்?

ஜெயா டிவி முதன்மை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் கவனித்து வரும் நிறுவனங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் போலி நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் முதலீடுகளை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சசிகலாவின் உறவினர்கள், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் 4-ஆவது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜெயா டிவி முதன்மை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் கவனித்து வரும் நிறுவனங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முடக்கப்பட்ட அந்த வங்கிக் கணக்குகள் 20-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றும், அவற்றை விவேக் ஜெயராமனே நிர்வகித்து வந்ததாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலானபோது, வங்கிக் கணக்குகளை தொடங்கி கோடிக்கணக்கான ரூபாயை அதில் செலுத்தியதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பான முக்கிய ஆவணங்களையும் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரு சில ஆவணங்கள் மட்டும் அவரது சகோதரி கிருஷ்ண பிரியா மற்றும் ஆடிட்டர் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் பினாமிகள் வசம் உள்ள சில சொத்துகளின் ஆவணங்களையும் வருமான வரி அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. சோதனையில் வெள்ளிக்கிழமை வரை மட்டும், ரூ.1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள், 8.5 கிலோ தங்கம், 6 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கணக்கில் வராத பல்வேறு சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் திவாகரனுக்கு சொந்தமான
மகளிர் கல்லூரியின் பயன்படாத விடுதி அறையில் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com