தமிழ் முறைப்படி விரும்பி திருமணம் செய்த ஜப்பான் பெண்
தமிழ்க் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு மதுரையில் இந்து முறைப்படி ஜப்பான் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டது.
சிஹாரு என்ற பெண் ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் கூடுதல் மொழியாக தமிழ்ப் பயில்பவர். இவருக்கு ஜப்பானில் தமிழ்க் கற்றுக்கொடுப்பவர் மதுரையைச் சேர்ந்த வினோதினி. இவர் கற்றுக்கொடுத்த மொழியால் ஈர்க்கப்பட்ட சிஹாரு, மெல்ல தமிழ்க் கலாசாரத்தாலும், பண்பாட்டாலும் கவரப்பட்டு தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார்.
இந்நிலையில் தமிழ்க் குடும்பங்களின் முறைப்படி திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட சிஹாருவுக்கு மணமகன் வீட்டாரும் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து மதுரையில் திருமணம் முடிக்க ஆசைப்பட்டபடி, சிஹாருவுக்கு யூடோ நீனகா தமிழ் முறைப்படி மங்கலநாண் சூட்டினார். இந்தக் கல்யாணத்தில் மதுரை தமிழ்க் குடும்பங்கள் வழிவழியாக கடைபிடிக்கும் பாரம்பரிய திருமண அழைப்பிதழ், மணவிழாவுக்கு வருவோரை பன்னீர் தெளித்து வரவேற்கும் இனிமை ஆகியவை கடைபிடிக்கப்பட்டது. ஜப்பான் ஜோடி தமிழக முறைப்படி திருமணம் செய்துகொண்டது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.