ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கி தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நடந்து வரும் வரலாற்று சிறப்புமிக்க இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கலாம்.
ஜனவரி 8: ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போதே நடத்த வேண்டும் என்று கோரி இளைஞர்கள் சென்னை மெரினாவில் கூடினர். ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக் கோரியும், பீட்டா அமைப்பைத் தடை செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஜனவரி 16: அலங்காநல்லூரில் கூடிய இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி போராட்டத்தினை தொடங்கினர். 21 மணி நேரம் நீடித்த அவர்கள் போராட்டத்தை வலுக்கட்டாயமாகக் கைது செய்து போலீசார் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
ஜனவரி 17: அலங்காநல்லூரில் கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக்கோரி இரண்டாவது முறையாக சென்னை மெரினாவில் கூடிய இளைஞர்கள், அறவழியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக மெரினாவில் நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மதுரை தமுக்கம் மைதானம், கோவை, நெல்லை என தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது.
ஜனவரி 21: இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான தடையை நீக்கி தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை நீங்கியது. இதையடுத்து மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.