ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் நொடிக்கு நொடி வலிமை பெற்று டெல்லி வரை சென்று அவசரச்சட்டம் ஓரிரு நாளில் பிறப்பிக்கப்படும் என்ற அறிவிப்பை பெற்றிருக்கிறது.
16ம் தேதி: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி போராட்டம் தொடங்கியது.
17ம் தேதி: சமூக வலைத்தளங்கள் மூலம் சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நள்ளிரவில் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
18ம் தேதி: மதுரை அலங்காநல்லூர், மதுரை தமுக்க மைதானம் மற்றும் சென்னை மெரினாவில் இரவு பகலாக போராட்டம் தொடர்ந்தது. தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
19ம் தேதி: ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் சென்று வலியுறுத்தினார். ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது ஏதும் செய்ய இயலாது என மோடி தெரிவித்தார். போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
20ம் தேதி: ஜல்லிக்கட்டு தொடர்பாக 2 நாட்களில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் தொடர்பான நடவடிக்கையில் குறுக்கீடு வராமல் இருக்க ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்குவதை ஒரு வாரத்திற்காவது ஒத்தி வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றது.
தமிழக அரசு கொண்டுவர உள்ள அவசரச் சட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து அவசர சட்ட வரைவை குடியரசுதலைவர் ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்து. தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கிறது என்றும் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் கூறினார் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை இணையமைச்சர் அனில் மாதவ்தவே.
வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு காளை விரைவில் துள்ளிக் குதிக்கும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.