ஜல்லிக்கட்டு வன்முறை: விசாரணை நீதிபதி மருத்துவமனையில் அனுமதி
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் கோவையில் நடைபெற்ற வன்முறை குறித்து அரசு தரப்பு சாட்சியங்களுடன், ஒரு நபர் விசாரணை குழு அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கோவை விருந்தினர் மாளிகையில் நேற்று விசாரணை நடத்தி வந்தார். மூன்று நாட்களுக்கு தொடர் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்து இருந்த நிலையில் திடீரென ரத்த அழுத்தம் காரணமாக அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் ரத்த அழுத்தம் காரணமாக ராஜேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீராக உள்ளதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.