ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பலவகையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சேலத்தில் இளைஞர்கள் ரயில் மறியலிலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் மனித சங்கலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி சேலம் டவுன் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த காரைக்கால்-பெங்களூரு விரைவு ரயிலை மறித்தனர். ரயில் என்ஜின் மீது ஏறிய இளைஞர்கள், மத்திய அரசு மற்றும் பீட்டாவை கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது, ரயிலுக்காக மூடப்பட்ட கேட்டில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் காத்திருப்பதாக போலீசார் கூறியதால், இளைஞர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்ணூர்பேட்டையில் திரண்ட 500 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பேரணி நடத்தினர். மேலும் நாளை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை மூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க போவதாகவும் தெரிவித்தனர்.