வன்முறையில் தீக்கிரையாக்கப்பட்ட நடுக்குப்பம் மீன்சந்தை... போலீஸார் மீது குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சென்னையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம் மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள நடுக்குப்பம் பகுதி. இங்குள்ள மீன் சந்தையை காவலர்களே தீயிட்டுக் கொளுத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தது, அதனருகிலிருந்த மீனவ மக்கள். நாடே வியந்து பேசிய இந்த அறவழிப் போராட்டத்தில், கடந்த 23-ஆம் தேதி வன்முறை ஏற்பட்டபோது ரூதர்புரம், அம்பேத்கர் பாலம், உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள் சூறையாடப்பட்டன.
அதுமட்டுமின்றி நடுக்குப்பம் மீன்சந்தையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே காரணத்தினாலேயே தங்களது கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தங்களின் கடைகளில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்கள், மீன்பிடி சாதனங்கள், வியாபாரம் செய்து வைத்திருந்த பணம் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டதாகவும், மீன் விற்பனையை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட தாங்கள் இப்போது அன்றாட பிழைப்புக்கே செய்வதறியாது திகைத்து நிற்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாளொன்றிற்கு லட்சக் கணக்கில் வியாபாரம் நடைபெற்று வந்த நடுக்குப்பம் மீன்சந்தை, இப்போது சாம்பலும், மண் மேடுமாய் காட்சியளிக்கிறது. மீனவர்களின் கடைகளில் பற்றி எரிந்த வன்முறை தீ, அவர்களுக்கு வெறும் சாம்பலை மட்டுமே விட்டுச் சென்றுள்ளது.