ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கொலைவெறி தாக்குதல்.. மதுரை ஆட்சியரிடம் மனு
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பானவற்றில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் நிலையில், அவற்றையும் முன் விரோதமாக கொண்டு காவல்துறையினர் தன்னை தாக்கியிருக்கலாம் என சந்தேகிப்பதாக முகிலன் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை தோற்கடிக்க வேண்டுமென பரப்புரை செய்ததாகவும், அதனடிப்படையில் தன் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலுக்கும், முதல்வருக்கும் தொடர்பு இருக்கும் என எண்ணுவதால் அது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தன்னை தாக்கிய அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் மீதும், அவரைத் தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த போராட்டத்தில் காயமடைந்தவர்களுக்கும், உடைமையை இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

