ஜல்லிக்கட்டு சட்டம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு மசோதாவை ஆளுநர் வித்யா சாகர் ராவ் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக அளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற வசதியாக அவசரச் சட்டத்தை ஆளுநர் பிறப்பித்ததாக கூறினார். இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக தற்போது தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேறியிருப்பதை ஆளுநர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சட்டம் மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தை திருத்தும் வகையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுப்பட்டியலில் உள்ள சட்டத்தில் மாநில அரசு திருத்தம் கொண்டுவந்தால் அரசியல் சாசன பிரிவு 254ன் படி அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவேண்டும் என ஆளுநர் மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.