தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதில் விலங்குகள் நல தன்னார்வ அமைப்பான பீட்டாவின் பங்கு முக்கியமானது.
காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் கடந்த 2011ம் ஆண்டு காளை சேர்க்கப்பட்டது. பீட்டா உள்ளிட்ட அமைப்புகளின் தொடர் நடவடிக்கைகளும் அரசின் இந்த நடவடிக்கைக்கு காரணமாக அமைந்தது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டங்களை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிற்கு பீ்ட்டா அமைப்பு கொண்டு சென்றது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி லண்டனில் விலங்கு நல ஆர்வலர்களின் பேரணி நடைபெற்றது. 2014ம் ஆண்டு பொங்கலின் போது நடைபெற்ற ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் காளை ஒன்று இறந்ததாகவும் கூறி ஜனவரி 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பீட்டா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு மே 7ம் தேதி வழங்கியது. இந்த வழக்கில் பீட்டா அமைப்பு ஒரு மனுதாரராக இருந்து. ஜல்லிக்கட்டை நடத்த வழிவகுக்கும் மத்திய அரசின் அறிவிக்கையை எதிர்த்து கடந்த ஆண்டு ஜனவரி 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பீட்டா அமைப்பும் பெங்களூருவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமும் இணைந்து இவ்வழக்கை தொடுத்தன. இதை ஏற்று அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்படும் என கடந்தாண்டு அக்டோபர் மாதம் தகவல்கள் பரவிய நிலையில் இதை அனுமதிக்க கூடாது என டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் பேரணி ஒன்று பீட்டா அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது.