மதுரை முடக்காத்தான் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன.
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் இருந்தது. இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. ஆனால் அனுமதி வழங்கப்பட்டவில்லை.
இந்நிலையில் மதுரை முடக்காத்தான் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. மதுரை சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதில் பங்கேற்றனர். சில காளைகள் வீரர்களுக்கு சிக்காமல், உரிமையாளர்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தது. காளைகளை அடக்கியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
30 நிமிடங்களுக்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றதும் ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் வாடிவாசலை தொட்டு வணங்கிவிட்டு சென்றனர். தகவலறிந்து காவல்துறையினர் அங்கு சென்றபோது யாரும் இல்லை.