ஜல்லிக்கட்டு விதிமுறைகள் வெளியீடு

ஜல்லிக்கட்டு விதிமுறைகள் வெளியீடு
ஜல்லிக்கட்டு விதிமுறைகள் வெளியீடு

ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழக ஆளுநரால் ஜனவரி 21ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர ‌சட்டம், அரசிதழில் அன்றைய தினமே வெளியிடப்பட்டது. அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் மத்திய சட்டம் 1960ன் பிரிவு மூன்றின்கீழ் வெளியிடப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் தனிநபர், அமைப்பு அல்லது குழு, மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டி விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியரின் அனுமதி கிடைத்ததும், ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள், இடம் ஆகியவற்றை அரசு வெளியிடும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் குறித்த விவரத்தை அளித்து மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். வருவாய், கால்நடை பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் காவல் துறையினர் கொண்ட ஜல்லிக்கட்டு கமிட்டியை ஆட்சியர் அமைத்து, ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் களத்துக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு 20 நிமிடங்கள் ஓய்வளிக்கப்பட வேண்டும். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் அவற்றுக்கு இடையே 60 சதுர அடி அளவில் போதிய இடைவெளி அளிப்பதுடன், பாதுகாப்பாக உணர காளையின் உரிமையாளர் அருகில் இருக்க வேண்டும். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் மழை, வெயில் பாதிக்காமல் கூடாரம் அமைத்திருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியின் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்பட வேண்டும். மது உள்ளிட்ட எதையும் காளைகளுக்கு வழங்கப்படாததை உறுதி செய்வதுடன், காளையை அடக்குவோர் 15 மீட்டர் தூரம் மட்டுமே திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும், 15 மீட்டர் தாண்டிய பிறகு அரங்குக்குள் திரும்பி வரும் காளையை தொடக்கூடாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com