போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது!
டெல்லியில், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்திருப்பது சில தினங்களுக்கு முன் அம்பலமானது. முன்னதாக அதனை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இதனை செய்த கடத்தல் கும்பல்காரர்களான முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடமிருந்து 2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் கிடைக்கப்பெற்றன. மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இதற்கு மூளையாக செயல்பட்டது யார் என்று திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
அதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக நிர்வாகியுமான ஜாபர் என்பவர்தன் இந்த கடத்துலுக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவருக்கு பலமுறை விசாரணை சம்மன் அனுப்பிய நிலையில், அவர் தலைமறைவாகினார்.
இதனையடுத்து அவரின் 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. மேலும் அவரது சகோதர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க, லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இருப்பினும் அவர் சமீபத்தில் வெளிநாடு சென்றதை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். குறிப்பாக கென்யா நாட்டுக்கு பலமுறை அவர் சென்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கிட்டத்தட்ட 2 வாரங்கள் தேடப்பட்டு வந்த ஜாபரை தற்போது மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்த விரிவான தகவல்களை இன்று பிற்பகல் 2 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்க இருப்பதாகவும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.