வண்டலூரில் விடிய விடிய ஆய்வு: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதிரடி கைது
தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்து இருந்தது.
முற்றுகையில் பங்கேற்க மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்துக்கு வந்த 70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், கயத்தார், புதூர் மற்றும் சாத்தான்குளத்தில் இருந்து கிளம்பிய 63 ஆசிரியர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்தது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் இருந்து சென்னை புறப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை செல்வதை தடுக்க ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி செல்லும் ரயில்களில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் சென்னைக்குள் நுழைவதை தடுக்க பெருங்களத்தூர் மற்றும் வண்டலூரில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சோதனைக்கு பிறகே சென்னைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. காவல்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனையின் காரணமாக வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு அருகேயும் போராட்டத்தில் பங்கேற்க வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே சென்னை தலைமைச் செயலகம் அருகேயும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.