ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட 6 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட 6 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட 6 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்

திருவாரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 6 வட்டாட்சியர்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள் சங்கமான ஜக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த சில நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் அரசு ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால், கடுமையாக விமர்சனம் செய்த நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது என்ற எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களை 1 மணி நேரத்தில் பணி நீக்கம் செய்ய முடியும் என்றும் உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்தது. அத்துடன் நிபந்தனைகள் இன்றி பணிக்கு திரும்பினால் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் தற்காலிகமாக அரசு ஊழியர்கள் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சூழலில் நீதிமன்ற உத்தரவையும் மீறி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கையம்மன் வட்டாட்சியர் இன்னாசி ராஜ், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் உதயகுமார், நன்னிலம் வட்டாட்சியர் பிரிதிவிராஜன், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் பரஞ்சோதி, மன்னார்குடி வட்டாட்சியர் மலர்கொடி, திருவாரூர் வட்டாட்சியர் அம்பிகாபதி ஆகியோர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் 6 பேரையும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com