போராட மாட்டோம் என்ற வாக்குறுதியை திரும்பப் பெற்றது ஜாக்டோ
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த வாக்குறுதியை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திரும்பப் பெற்றனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதற்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது நீதிமன்றம் கேட்டுக் கொண்டதால் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வூதியத் திட்டம் தொடர்பான ஸ்ரீதர் குழு அறிக்கை மற்றும் ஊதிய முரண் குறித்த சித்திக் குழுவின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதை ஏற்க மறுத்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர், அரசின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டதை குறிப்பிட்டனர். ஆனால், போதிய அவகாசம் வழங்கியும் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றம்சாட்டினர். ஆகையால் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்ற வாக்குறுதியை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தனர். இதைக் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

