திட்டமிட்டபடி 7ம் தேதி வேலை நிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
அரசுடனான பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். அதற்கு முன்பு 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமலாக்க வேண்டும் என்பது ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 7 முதல் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
இன்று தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும், ஜாக்டோ ஜியோ சார்பில் அதன் தலைமைக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். ஆனால் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறியுள்ளனர்.